‘சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள்’ என்று வி.சி.க., தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் நடந்த கட்சி கூட்டத்தில், திருமாவளவன் பேசியதாவது: –
ஒரு மாநில கட்சி என்று அங்கீகாரம் பெறுவதற்கே, 35 ஆண்டுகள் பெரும்பாடு பட நேர்ந்தது. சில பேர், 50, 60 வயசு வரை சினிமாவில் நடித்து பொருளைத் தேடி, சுகத்தை தேடி, சொகுசாக வாழ்ந்து விட்டு, இளமை காலத்தை எல்லாம் சொகுசாக கழித்துவிட்டு, தேவையான அளவிற்கு சொத்து சேர்த்து வைத்து கொண்டுவிட்டு, காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள்.
அவர் ஊரு ஊராக இப்படி போய் அலைய வேண்டியது இல்லை. ஊரு ஊராக போய் கொடி ஏற்ற வேண்டியது இல்லை. ஊரு ஊராக போய் மக்களை சந்தித்து பேச வேண்டியது இல்லை. உடனே கட்சியை துவங்கலாம்; அடுத்து ஆட்சிக்குப் போகலாம். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
யார் பெயரையும் குறிப்பிடாமல், திருமாவளவன் மறைமுகமாக விமர்சித்துப் பேசியது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது. அதேநேரத்தில், யாரை அவர் சொல்கிறார் என்ற கேள்வியும் எழ துவங்கி உள்ளது.
யாரை சொல்கிறார் என்பது அரசியல் பார்வையையாளர்கள்தான் புரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை. அவர் யாரை சொல்கிறார் என்பது ஒரு சிறுவனுக்குக்கூட தெரியும்.