பாமக தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணியை செயல்தலைவராக நியமனம் செய்கிறேன் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது அன்புமணி ராமதாஸை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ்,
“ராமதாஸ் எனும் நான் நிறுவனர் என்ற அடிப்படையில் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணியை செயல்தலைவராக நியமனம் செய்கிறேன்.” என்று அறிவித்துள்ளார். மேலும், இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ள பாமக மாநாடு பணிகளை கவனித்து வரும் அன்புமணிக்கு கட்சித் தொண்டர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜிகே மணி ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டமன்றத் தேர்தலில் அன்புமணிக்கு உதவ முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமனம் செய்வதாக அறிவித்தார். அப்போது அருகில் இருந்த அன்புமணி குறுக்கிட்டு மறுப்பு தெரிவித்தார்.
இதனால் கோபமடைந்த ராமதாஸ், தான் ஆரம்பித்த கட்சி பாமக என்றும்; தாம் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார். அப்போது தொண்டர்கள் சிலர், முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு, இது தன் கட்சி என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய ராமதாஸ், விருப்பம் இல்லை என்றால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளலாம் என்றார்.
இதனால் அதிருப்தி அடைந்த அன்புமணி, பனையூரில் தான் தனியாக அலுவலகம் தொடங்கி இருப்பதாக கூறிவிட்டு மைக்கை தூக்கி எறிந்தார். தொடர்ந்து ஏராளமான தொண்டர்கள் சூழ பொதுக்குழுவில் இருந்து அன்புமணி ராமதாஸ் வெளியேறிய நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் அவரை பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் இருதரப்பையும் சமாதானப்படுத்த முயற்சிகள் நடந்தன.
இந்த நிலையில்தான் பாமக தலைவராக இனி தானே செயல்படப்போவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும் அன்புமணியை செயல்தலைவராகவும் நியமனம் செய்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராமதாஸ்,
“கட்சியின் புதிய தலைமுறையினர் என்னுடைய தலைமையின் கீழ் சிறிது காலம் பணியாற்ற வேண்டும் என்ற அன்பு கட்டளையின் பேரிலும், அதனை தடுக்க மனமில்லாமல் அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டி, 2026-இல் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டும் பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துள்ளேன்.
அதனை செயல்படுத்த வேண்டி கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் எனக் கருதி எனது முழு மனதுடன் இந்த அறிவிப்பை நான் இன்று (நேற்று) வெளியிடுகிறேன்.
இதன் அடிப்படையில் பாமகவின் அரசியல் பேரியக்கத்தை தொடங்கிய நிறுவனர் ராமதாஸ் ஆகிய நான் நிறுவனர் என்பதோடு, பாமகவின் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக் கொள்கிறேன். தேர்தலின் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் பாமகவின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் மருத்துவர் அன்புமணி ராமதாஸை பாமகவின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன்.
எனது பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பதவி வரிசை அடிப்படையில் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ், செயல் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், கௌரவத் தலைவர் ஜி.கே மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் தற்போது உள்ளவாறு அமைப்பு ரீதியாக செயல்படுவார்கள்.
இந்த அறிவிப்பை ஏற்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒன்றுபட்டு உணர்வோடு தீவிரமாக செயல்பட்டு வெற்றிக்கு உழைக்க வேண்டும். தலைவர் பதவி ஏற்கும் இந்த முடிவுக்கு காரணங்கள் பல உண்டு. அவற்றை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. சிறுக சிறுக பகிர்ந்து கொள்ளலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணி ஆதரவாளர்கள் போராட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பா.ம.க.வின் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்றும், அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விழுப்புரத்தில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாஸ், அன்புமணி இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளது பா.ம.க. தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனத்தில் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.