கிருஷ்ணகிரி அருகே பள்ளி விழாவில், பா.ம.க., துண்டு அணிந்து கொண்டு மாணவர்கள் நடனம் ஆடிய வீடியோ வைரல் ஆன நிலையில், பள்ளி தலைமையாசிரியர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மகேஷ் கூறியதாவது:-
நாங்கள் மொழி பெயர்ப்பாளர்களை உருவாக்கவில்லை. திறமையாளர்களை உருவாக்கத்தான் இரு மொழிக் கொள்கை தேவை என்று சொல்கிறோம். நாம் எல்லோரும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்து விட்டு வந்திருக்கிறோம். நம்ம பிள்ளைகளும் அதைத் தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
எதுக்கு பிள்ளைகளுக்கு கஷ்டத்தை கொடுக்கிறீர்கள். எங்க பிள்ளை ஆசைப்பட்டால் எவ்வளவு மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். கட்டாயமாக இருக்க கூடாது என்பது தான் எங்களது கருத்து. நீங்கள் மும்மொழி கொள்கையை ஒப்புக் கொண்டால் தான் நிதி தருவேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
மும்மொழிக் கொள்கைக்கு பள்ளிக்குழந்தைகளிடம் கையெழுத்து வாங்குவது, ரயிலில் பிஸ்கட் கொடுத்து பயணிகளை ஏமாற்றுவது போல் இருக்கிறது. பிஸ்கட்,மிட்டாய் கொடுத்து ஏமாற்றும் வேலை எல்லாம் செய்யக்கூடாது. மிஸ்டு கால் கொடுத்து ஆட்கள் சேர்ப்பதற்கான தொடர்ச்சியாகத் தான் இதையும் பார்க்கிறோம்.
மும்மொழிக் கொள்ளை குறித்து பெற்றோர்களிடம் சொல்லுங்கள். முதலில் நீங்க வீடு வீடாக போய் தான் கையெழுத்து வாங்க வேண்டும். பள்ளிகளுக்கு வரக்கூடிய பிள்ளைகளை பயமுறுத்துவது, கையைப் பிடித்து கொண்டு வந்து மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்குவது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.
தலைமையாசிரியர் இடமாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தட்டரஹள்ளி அடுத்த சோப்பனுார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, சில மாணவர்கள், பா.ம.க., துண்டு அணிந்தபடி கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடினர்.
இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். அதன் முடிவில், பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமார் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை, அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று உறுதி செய்தார்.