தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து, 1 சவரன் நேற்றுமுன்தினம் 72,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது; கிராம் தங்கம் முதல் முறையாக 9,000 ரூபாயை தாண்டியுள்ளது. நேற்று (ஏப்.22 ) தங்கம் விலை 1 சவரன் ரூ.74, 320 ,கிராம் 9,290 க்கு விற்கப்பட்டது.
அமெரிக்கா – சீனா இடையில் நிலவும் வர்த்தக போர் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். இதனால், உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டிலும் அதன் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,945 ரூபாய்க்கும், சவரன் 71,560 ரூபாய்க்கும் விற்பனையானது; வெள்ளி கிராம் 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்றுமுன்தினம் தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, முதல் முறையாக 9,000 ரூபாயை தாண்டி, 9,015 ரூபாய்க்கு விற்கப்பட்டது; சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, 72,120 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. நேற்று (ஏப்.22 ) தங்கம் விலை 1 சவரன் ரூ.74, 320 ,கிராம் ரூ.9,290 க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 111 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இம்மாதம் 1ம் தேதி, தங்கம் கிராம் 8,510 ரூபாய்க்கும், சவரன் 68,080 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் கிராமுக்கு 505 ரூபாயும்; சவரனுக்கு 4,040 ரூபாயும் அதிகரித்துள்ளது.
இது குறித்து, சென்னையில் தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் கூறியதாவது:
பரஸ்பர வரி விதிப்பு குறித்த முடிவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக இருப்பதாலும், கடுமையாக அதை அமல்படுத்தி வருவதாலும், உலகளவில் தங்கத்தின் மீது முதலீடுகள் குவிந்து வருகின்றன. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், தங்கம் விலை இன்னும் உயரும்.
உலக சந்தையில் கடந்த வாரம், 2.75 லட்சம் ரூபாயாக இருந்த, 31.10 கிராம் எடை உடைய ‘அவுன்ஸ்’ தங்கம் விலை, இந்த வார துவக்கத்திலேயே 2.92 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது. நம் நாட்டில் மிக விரைவாக சவரன் 80,000 ரூபாயை தொடும்.
சவரன் விலை சராசரியாக 3,000 ரூபாய் – 4,000 ரூபாய் என, ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நிலையில், இந்தாண்டில் நான்கு மாதங்கள் கூட முடியாத நிலையில், 15,000 ரூபாயை எட்டியுள்ளது.
இவ்வாறு கூறியுள்ளனர்.