பணம் மட்டும் இருந்தால் எந்த விஷயம் பற்றியும் சினிமா எடுத்து சம்பாதிக்கலாம் என்ற சிலரின் அகங்காரத்தை அடித்து நொறுக்கி உள்ளனர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்.
சமீப காலமாக தமிழ் உட்பட இந்திய மொழிகளில் வெளிவரும் சினிமாக்களில் சிலரது தயாரிப்புகள், இயக்கங்களில் மட்டும் ஒருசார்பு நிலை அதிகம் காணப்படுகிறது. (அது பற்றி தற்போது விரிவாக பேச வேண்டாம்). ஆமாம். பணம் மட்டும் இருந்தால், எந்த ஒரு விஷயத்தை பற்றியும் நடுநிலை தவறி, ஆமாம் முழு உண்மை தான், நடுநிலை தவறித்தான் சில டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் சினிமா எடுக்கின்றனர்.
தேவையில்லாத இடங்களில் சிலவற்றை தேவையில்லாமல் சேர்க்கின்றனர். சிலவற்றை வேண்டுமென்றே மறைக்கின்றனர். என் பணம், நான் தான் டைரக்டர், நான் நினைப்பதைத் தான் படம் எடுப்பேன். அல்லது எனக்கு பணம் தருபவர் சொல்வதைத் தான் படம் எடுப்பேன். மக்களை பற்றியோ, நியாய அநியாயங்கள் பற்றியோ, நீதி நிலவரம் பற்றியோ, தர்மநிலை பற்றியோ, உண்மை நிலை பற்றியோ, மக்கள் நலன் பற்றியோ, கவலைப்பட மாட்டேன்.
சரியோ, தப்போ, என் கருத்தை திணித்து பணம் சம்பாதிப்பது மட்டுமே என் நோக்கம் என்ற அகங்கார அத்துமீறல்கள் இவர்களிடம் அதிகரித்து வருகிறது. சினிமாக்காரர்களில் சிலர் நாங்கள் கலைஞர்கள் மட்டும் இல்லை. சினிமாவை ஆயுதமாக பயன்படுத்தும், கை தேர்ந்த அரசியல்வாதிகள் என்ற தோரணையில், செயல்பட்டு வருகின்றனர். இக்கும்பல் சென்சார் போர்டு அதிகாரிகளை எப்படியெல்லாம் வீழ்த்துவார்கள் என்பது பற்றி மக்களுக்கு தெரியும்.
எனவே அதனை தனி செய்தியாக சொல்ல வேண்டியதில்லை. சிலரிடம் தொடங்கி இந்தியாவின் பல மாநிலங்களில் சினிமாத்துறையில் பற்றி எரியும் அகங்காரத்தினை முதன் முதலாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் தீ வைத்து எரித்துள்ளனர்.
விஷயம் இது தான். கேரளாவை சேர்ந்த பிரிதிவிராஜ் என்பவர் இயக்கி, மோகன்லால் நடித்த எம்புரான் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் முதல் பாகம் வசூலில் சூப்பர் ஹிட் அடித்ததால் வசூலான அதிகப்படியான பணம், ஏற்படுத்திய அகங்காரம் காரணமாக, இரண்டாம் பாகமான எம்புரான் படத்தில் பல தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டுள்ளனர்.
அதில் தமிழக- கேரள அரசுகள் மிக, மிக நுட்பத்துடன் கையாண்டு வரும் சென்சிட்டிவ் ஆன விஷயமான முல்லைப்பெரியாறு அணை பிரச்னை பற்றி மிக, மிக விஷமத்தனமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்திற்கும் படத்தின் கதைக்கும் தொடர்பில்லை. ஆனாலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, தங்களது படத்தின் விளம்பரத்திற்காக பெரியாறு அணை பிரச்னையை கையில் எடுத்துள்ளனர்.
இந்த படத்தை பார்த்ததும், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் கொந்தளித்தார். தனது சங்க உறுப்பினர்களை திரட்டி படத்தை தயாரித்த கோகுலம் சிட்பண்ட் கோபாலனின் கம்பம் கிளை முன் முற்றுகை போராட்டம் நடத்தினார். சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போது கம்பத்தில் நடந்த இந்த போராட்டம் தமிழக சட்டசபையின் கவனத்தை ஈர்த்தது.
எப்போதும் டென்சன் ஆகாத அமைச்சர் துரைமுருகனே, சட்டசபையில் கொந்தளித்தார். படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் அந்த சம்பவம் பற்றி அறிந்ததும் நான் கோவப்பட்டேன் என்று வெளிப்படையாக பேசினார். அதற்கடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘பெரியாறு அணை பற்றிய காட்சிகளை சென்சார் அனுமதியோடு தான் வெளியிட்டிருக்கின்றனர். தற்போது நாம் எதிர்ப்பினை காட்டிய பின்னர் அந்த காட்சிகளை நீக்கி விட்டனர்’ என்று சற்று கடுமை காட்டி பேசினார். படத்தில் இருந்து ஒரு வழியாக பெரியாறு அணைக்கு எதிரான காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன.
இதற்கும் ஒரு படி மேலாக எம்புரான் படத்தை தயாரித்த கோகுலம் நிறுவனம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, அமலாக்கத்துறை சென்னையில் உள்ள அந்த நிறுவனங்களில் சோதனை நடத்தி கணக்கில் வராத 1.5 கோடி ரூபாயினை கைப்பற்றி உள்ளது. தேனி மாவட்டம், கம்பம், கூடலுாரில் எம்புரான் பணம் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களி்ல் எந்த தியேட்டரிலும் எம்புரான் திரையிடப்படக்கூடாது என்ற பெரியாறு வைகை பாசன விவசாயிகளின் சங்க கோரிக்கையும் ஏற்கப்பட்டு விட்டது.
படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டாலும், அந்த அகங்காரக்காரர்கள் எடுத்த படம் தமிழ்நாட்டில் ஓடக்கூடாது என்ற பச்சைத்துண்டு விவசாயிகளின் கோரிக்கைக்கு ஒட்டு மொத்த தமிழ்நாடும் ஆதரவு வழங்கி உள்ளது. இப்போது எம்புரான் படக்குழுவினர் தமிழக விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தை அறிவி்த்துள்ளனர். இது மேலும் படக்குழுவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஆக முதன் முறையாக பட்டினியுடன் வாடும் விவசாயிகள், பணக்கார சினிமாத்தனத்தின் அகங்காரத்திற்கு தீ வைத்து எரித்துள்ளனர். இதனை ஒரு பாடமாக சினிமாக்காரர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் கலைஞர்கள் தான். அரசியல்வாதிகள் இல்லை. கலையை வளர்ப்பதும், அதன் மூலம் சம்பாதிப்பதும் தான் உங்களுக்கான வாழ்வியல் நெறிமுறை. சமூக சிக்கல்களை தீர்ப்பதற்கு தான் மக்கள் அரசாங்கத்தை தேர்வு செய்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதனை பார்த்துக் கொள்ளும்.
சினிமாக்காரர்கள் மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி, அவர்கள் மறந்த பல விஷயங்களை நினைவுப்படுத்தி மக்களை துாண்டி விட்டு மோதல்களை ஏற்படுத்தி, சம்பாதிப்பது மிகவும் இழிவான செயல். அந்த செயலை சினிமாக்காரர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது இந்தியாவில் உள்ள அனைத்து சினிமாக்காரர்களுக்கும் பொருந்தும்.
-மா.பாண்டியராஜ்