தமிழக பாஜக மாநில தலைவர் தேர்தல் திடீரென இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் சந்திப்பு, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியுடன் சந்திப்பு என ஒரு பக்கம் திட்டமிடப்பட்டிருக்க, மறுபுறம் திடீரென இன்று பிற்பகல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆடிட்டர் குருமூர்த்தியை அவரது இல்லத்தில் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியது என்று தமிழ்நாடு பாஜக பரபரப்பாக இருந்து வருகிறது.
தேர்தல் அறிவிப்பு
இந்தப் பரபரப்பிற்கெல்லாம் காரணம், தமிழ்நாடு பாஜக தலைவர் மாற்றம் தான் என பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக மாநிலத் துணைத் தலைவரும், மாநிலத் தேர்தல் அதிகாரியுமான சக்கரவர்த்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாஜகவின் அமைப்பு பருவ தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. கிளை தொடங்கி, மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரை தேர்தல் முடிந்து இறுதியாக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது.
தேர்தலுக்கான விருப்ப மனுக்களை நாளை (11ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை கட்சியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்
மேலும், மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும், குறைந்தது 10 வருடம் அடிப்படை உறுப்பினராகவும் இருக்க வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன்மொழியவும், மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.