கடந்த ஒன்றரை மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையில் மோதல் தொடங்கிவிட்டது. பிப்ரவரி 9ஆம் தேதியன்று அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாய சங்கங்கள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆனால் அதற்கான விழா அழைப்பிதழ்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை எனக் கூறி விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா, மகளிர் தின விழா ஆகியவற்றை செங்கோட்டையன் புறக்கணித்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னதாகவே அவர் பங்கேற்றார்.
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, பட்ஜெட் கூட்டத் தொடரை எதிர்கொள்வது தொடர்பான அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டியிருந்தார்.
இந்தக் கூட்டத்தை கோபிச்செட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தார். மார்ச் 15ஆம் தேதியன்று வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, நடைபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
அதேநேரம், சபாநாயகர் அப்பாவுவை தனது தொகுதிப் பிரச்னை தொடர்பாக செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இது விவாதத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சட்டமன்றக் கூட்டத் தொடரில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு அ.தி.மு.க தீர்மானித்தது. இதுகுறித்து ஆலோசிக்க எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து மார்ச் 15ந் தேதி செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதற்கு “அதைப் பற்றி அவரிடமே கேளுங்கள். அவருக்கு வேறு வேலைகள் இருக்கும். தனிப்பட்ட பிரச்னைகளைப் பற்றிப் பேச வேண்டாம். யாரையும் எதிர்பார்த்து நான் இல்லை” என்று காட்டமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் மார்ச் 17 உள்கட்சி மோதல்கள் முடிவை எட்டின.
சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க கொண்டு வந்தது. சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதையும் முன்வைத்து அ.தி.மு.க இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் விவாதத்தை துணை சபநாயாகர் கு.பிச்சாண்டி நடத்தினார்.
அப்போது குரல் வாக்கெடுப்பு குறித்து துணை சபாநாயகர் அறிவித்த அறிவிப்பு அதிமுக புதிய உறுப்பினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. “ஆனால் இதுதான் நடைமுறை” என எடப்பாடி பழனிசாமியிடம் சென்று செங்கோட்டையன் கூறினார். “மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் சொல்வதுதான் சரியானது. அதன்படியே செயல்படுங்கள்” என அ.தி.மு.க உறுப்பினர்களை நோக்கி எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதன்மூலம் இருவருக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பார்க்கப்பட்டது. இதை செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, “எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை” எனக் கூறினார்.
“கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சிலர் செங்கோட்டையனிடம் தனிப்பட்ட முறையில் பேசியதால் இருவருக்கும் இடையே மோதல் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செங்கேட்டையன் தரப்பில் விசாரித்தபோது “கட்சியின் பொதுச் செயலாளரும் செங்கோட்டையனும் இயல்பாக இருந்தாலும் பொதுவெளியில் அது செய்தியாக மாறுகிறது. அதைத் தவிர்க்கும் வகையில் செங்கோட்டையனிடம் பேசியுள்ளனர்.
அவரும் அதை ஏற்றுக் கொண்டார்,” “இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஆகிவிட்டது. இருவரும் நல்லபடியாகப் பேசி முடித்துவிட்டனர்” என்று கூறினர். ஓ..அப்படின்னா பொதுவெளியில் செய்தியாக மாறுவதை தவிர்க்கத்தான் இந்த ஏற்பாடா..? என்று வடிவேல் பாணியில் கேட்கிறார்கள் சிலர். மற்றவர்களுக்கு சமாதானம் மாதிரி தெரியரத்துக்காக முட்டல் மோதலை மூடி வச்சிருக்கிறாங்களாம்னு அவங்க கட்சிக்காரர்களே கூறுகிறார்களாம்.