அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் வெளிப்பாட்டில் பேசி வருகிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,கூறியுள்ளார்.
‘உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்தியாவிற்கு ஒளி கொடுக்கும் மகத்தான தீர்ப்பு. இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறி உள்ளது. ஆளுநர் ரவி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி கிடப்பில் போட்டு வைத்தார்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பத்து மசோதாக்கலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம்,ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் பாடம் புகட்டி உள்ளது.
செவிலில் அறைந்தாற் போன்ற ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ஜனநாயக சக்திகள் இங்கு இணைந்து செயல்படுவது ஆளுநருக்கு மிகப்பெரிய பாடத்தை புகட்டி உள்ளது. இந்த தீர்ப்பு தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி என்றும் இனி மற்ற மாநில ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்க முடியாது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதலமைச்சரை சந்தித்து பாராட்டி வாழ்த்தி உள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து பாஜக ஆளாத மற்ற மாநில முதலமைச்சர்களை அழைத்து தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் நடத்தியது போல கூட்டம் நடத்தி கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர நடவடிக்கை வேண்டும்.
மீண்டும் நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இன்று (நேற்று) நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று அறிவித்திருப்பது மூலமாக அதிமுக மக்களிடமிருந்து விலகிச் செல்வதாகவும், நீட் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புவதை தவிர ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும் என்று அதிமுக தெரிவிக்க வேண்டும்?
திமுக கூட்டணி கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி வருவார்கள் என்று எதிர்பார்த்த எடப்பாடி பழனிசாமி அப்படி நடைபெறாத காரணத்தால் விரக்தியின் வெளிப்ட்டில் பேசி வருகிறார் என்று திருமாவளவன் கூறினார்.