தொகுதி மறுசீரமைப்பு குறித்த தென்மாநில கூட்டுக்குழு நடவடிக்கைக்காக முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவ் ஆகியோருக்கு அமைச்சர் எ.வ.வேலு மற்றும் எம்.பி.வில்சன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தென்மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து சென்னையில் வருகிற 22ம் தேதி தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தென்மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களை தமிழக அமைச்சர்கள் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்த தென்மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, ஆந்திர மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய அமைச்சர் எ.வ.வேலு மற்றும் எம்.பி. வில்சன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர். அதேபோல தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவுக்கும் அழைப்பு விடுத்தனர்.