கல்வியிலும் திறமையிலும் உயர்வெற்றி காண முயலுங்கள். தைரியமாக விளையாடுங்கள், நேர்மையான முறையில் வெற்றி பெறுங்கள் என சென்னை கால்பந்து போட்டி குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த அதிரடி கால்பந்து போட்டியில் பிரேசில் லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா ஆல்-ஸ்டார்ஸ் அணிகள் கடுமையாக மோதின. இதில் பிரேசிலின் புகழ்மிக்க வீரர்கள் ரொனால்டினோ, ரிவால்டோ, எட்மில்சன், காபு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இந்தச் சிறப்பான போட்டியை பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:-
“சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பிரேசில் ஜாம்பவான்கள் மற்றும் இந்தியா ஆல்-ஸ்டார்ஸ் அணிகளின் கால்பந்து போட்டி பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டின் அதீத உற்சாகம் தமிழ்நாட்டை பெருமிதத்துடன் உற்சாகமூட்டியது. இது ஒரு சாதாரண போட்டியாக இல்லாமல், நினைவில் நிற்கும் ஒரு தருணமாகவும், எதிர்கால வீரர்களுக்குத் தூண்டுதலாகவும் அமைந்தது.
குழந்தைகளே, கல்வியிலும் திறமையிலும் உயர்வெற்றி காண முயலுங்கள். தைரியமாக விளையாடுங்கள், நேர்மையான முறையில் வெற்றி பெறுங்கள்!”
இவ்வாறு அவர் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு அரசு, விளையாட்டுத்துறையினை. மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களை. செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக. சர்வதேச அளவிலான போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்றன. சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் வெற்றி பெறும் வீரர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதுடன் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் வெற்றிபெறும் வீரர்களுக்கு நிதி உதவியும் வழங்கி வருகிறது.
குறிப்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறையில் பல முன்னெடுப்புகளை செய்தார். ஒலிம்பியாட் போட்டிகள், சர்வதேச அளவிலான பேட்மிண்டன் போட்டிகள், செஸ் போட்டிகள் என்று பல போட்டிகளை இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவே நடத்தப்பட்டன.
விளையாட்டு மூலமாக உடல் ஆரோக்யமாக இருந்தால் கற்றல் திறன் கூடும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. அதன் அடிப்படையில் தமிழக அரசு விளையாட்டுக்கு முன்னுரிமை அளித்து இளைஞர்களை ஊக்குவித்து வருகிறது.