சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் நேற்று (26ம தேதி ) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
முதலமைச்சர் நிவாரணம்
இந்நிலையில், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.மேலும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.