கடந்தாண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு கூடுதலாக 522 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், பிகார், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு பேரிடர் நிவாரண நிதியாக ஆயிரத்து 280 கோடியே 35 லட்சம் ரூபாய் ஒதுக்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதில், தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு கூடுதலாக 522 கோடியே 34 லட்சம் ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதேபோன்று, புதுச்சேரியிலும் கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு 33 கோடியே 6 லட்சம் ரூபாய் ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிகாருக்கு 588 கோடியே 73 லட்சம் ரூபாயும், இமாச்சல பிரதேசத்திற்கு 136 கோடியே 22 லட்சம் ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
அதேபோல, கடந்த 2024-25 நிதியாண்டில் மாநில பேரிடர் நிதியின் கீழ், 28 மாநிலங்களுக்கு 20 ஆயிரத்து 264 கோடி ரூபாயும், தேசிய பேரிடர் நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு 5 ஆயிரத்து 160 கோடியே 76 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.