விழுப்புரம் அருகே கிராம சபை கூட்டத்தை இருளர் ஊராட்சி தலைவர் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆனாங்கூர் பழங்குடி இருளர் சமூக ஊராட்சி மன்ற தலைவராக ஏழுமலை மனைவி சங்கீதா என்பவர் உள்ளார்.
இவர் தன்னை துணை தலைவரின் கணவர் குணசேகர் உள்ளிட்ட நான்கு பேர் பணி செய்ய விடாமலும், நாற்காலியில் அமர விடாமல் தடுத்து சாதிய வன்கொடுமை செய்து வருவதாக குற்றம்சாட்டி நேற்று நடைபெற்ற ஊராட்சி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டடார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது :
நான் பழங்குடி இருளர் சமூகத்தைச் சார்ந்தவர் ஆவேன். எனது கணவர் இறந்து 20 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ,கிராமத்தின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பல முற்போக்கான செயல்பாடுகளை செய்து வருகிறேன்.
நடந்து முடிந்த 2021 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாட்களில் இருந்து இந்நாள் வரை ஊராட்சி மன்ற துணைத் தலைவரான சித்ரா, அவரது கணவர் குணசேகர், வார்டு உறுப்பினர் சுதா அவரது கணவர் சரவணன் ஆகிய நான்கு பேரும் என்னை தலைவர் நாற்காலியில் அமர விடாமலும், பணி செய்ய விடாமலும், தொடர்ந்து சாதி பெயரை சொல்லி இழிவாக திட்டி வருகின்றனர்.
நீ இருளச்சி தலைவர் நாற்காலியில் அமர்ந்தால் ஊரே தீட்டாகிவிடும் என்று கேவலமாக பேசியும் வருகின்றனர், அதோடு மீறி உட்கார்ந்தால் வெட்டி விடுவேன் என கொலை மிரட்டலும் கொடுக்கின்றனர். அதுமட்டுமின்றி ‘அடிப்படை வசதிகளான குடிநீர் மின்சாரம் சாலை மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு ஊதியம் விடுவிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் டிஜிட்டல் கீ தர மறுத்தும், ஊராட்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக செயல்பட்டு வருகிறார்.
இதனால் ஊராட்சிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்ய முடியாமலும் நிர்வாகத்தை சரிவர நடத்த முடியாமலும் உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர் கடந்த 28.8.2024 அன்று காலை சுமார் 11:30 மணி அளவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பணி செய்து வரும் இடத்தை நான் ஆய்வு செய்து கொண்டிருந்த போது, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா, அவரது கணவர் குணசேகரன் வார்டு உறுப்பினர் சுதா ஆகியோர் 100 நாள் வேலை செய்யும் இடமான ஏரி பகுதிக்கு வந்து. மேற்படி அனைவரும் சேர்ந்து உன்னை யார் இங்கு வரச் சொன்னது. உனக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது. இருளச்சி உனக்கு எங்களை வேலை வாங்கும் அளவிற்கு உனக்குத் துணிச்சல் வந்து விட்டதா, என்று நான் சார்ந்த சாதியை இழிவுபடுத்தும் விதமாகவும், என்னையும் தகாத வார்த்தைகளால் திட்டி, இனிமேல் நீ இந்த இடத்துக்கு வந்தால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினார்கள்.
இதுகுறித்து வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் என துறை சார்ந்த அனைத்து அரசு அதிகாரிகளிடமும் புகார் மனு கொடுத்தும், இந்நாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை.
மேலும் இது சம்பந்தமாக செஞ்சி காவல் நிலையத்தில் கடந்த 01.9.2024 அன்று புகார் அளித்தேன் 24 நாட்களுக்கு மேலாகியும் இந்நாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் செஞ்சி காவல் துறையினர் எதிர்த்தரப்பினரிடம் ஒரு புகார் மனுவை வாங்கிக் கொண்டு நான் கொடுத்த புகார் மனுவை திரும்பப் பெறவில்லை என்றால் என் மீது வழக்கு பதிவு செய்து விடுவோம் என காவல்துறையினர் மிரட்டுகின்றனர். எனவே அரசு பழங்குடி இருளர் சமுதாயத்தை சார்ந்த எனக்கு முழு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அளித்திட வேண்டும்.
என்னை சாதி வெறி தாக்குதலுக்கு உட்படுத்திய அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
மாவட்டம் முழுவதும் காந்தி ஜெயந்தியை ஒட்டி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்ற போது சமூகத்தைச் சார்ந்த ஒரு ஊராட்சி மன்ற தலைவர் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து, பொது மக்கள் நடமாட்டம் அதிகளவு உள்ள விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக பிரதான நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இச்சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.