சென்னையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
சென்னையில் பசுமைவழிச்சாலையில் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., இல்லம் உள்ளது. இந்த வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதுபற்றிய தகவலறிந்த போலீசார், உடனடியாக விசாரணையில் இறங்கினர். மிரட்டல் விடுக்கப்பட்ட இ மெயில் பற்றிய விவரங்களை சைபர் கிரைம் போலீசார் திரட்டத் தொடங்கிய அதே வேளையில், போலீசார் இ.பி.எஸ்., வீட்டில் சோதனையில் இறங்கினர்.
மோப்பநாய் உதவியுடன் போலீசார், வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டு உள்ளதா என தீவிர சோதனை நடத்தினர். இ மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது, அதை அனுப்பியது யார் என்ற கோணங்களில் சைபர் க்ரைம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.