‘பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜனவரி 27ம் தேதி அன்று உத்தரவிட்டது.
மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் படி தமிழகத்தில் தேசிய, மாநில, உள்ளாட்சி அமைப்பு சாலைகளில் உள்ள தங்கள் கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ், ‘ராயபுரத்தில் நடை பாதையில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பத்தையும், கல்வெட்டையும் அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று (27ம் தேதி) விசாரணைக்கு வந்தபோது, கொடிக்கம்பங்கள் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ‘பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப் 21ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் ஏப்ரல் 21ம் தேதிக்குள் அகற்றாவிட்டால், வழக்குத் தொடரலாம்’ என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.