அதிமுக தலைமையில் கூட்டணி உறுதி என்று மத்திய அமைச்சர் அமித்ஷா செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள அமித் ஷா, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதில், நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் போட்டியின்றி தேர்வாக இருக்கிறார்.
நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்த அமித் ஷா, கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும் என்றும் தெரிவித்தார். பாஜக வேட்புமனு நிறைவடைந்ததும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிண்டியில் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த அமித் ஷாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அந்தச் செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷா, “பாஜக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் ஒன்றிணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். அடுத்து வரப்போகிற தேர்தலை என்.டி.ஏ. கூட்டணியின் இதர கட்சிகளுடன் இணைந்து சந்திக்க இருக்கிறோம் என்பதை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
இந்தத் தேர்தல் தேசிய அளவில் பிரதமர் மோடியின் தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் நடைபெற இருக்கிறது. 1998ஆம் ஆண்டு முதல் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துவருகிறது. தமிழ்நாட்டில் ஒருமுறை 38 இடங்களில் 30 இடங்களை இந்தக் கூட்டணி வென்றுள்ளது.
வரும் தேர்தலில் பாஜக – அதிமுக என்.டி.ஏ. கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைக்கும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
அதிமுக-பாஜக கூட்டணி உறுதி என்று அமித் ஷாதான் அறிவிப்பு வெளியிட்டார். கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அதிமுக பொதுச்செயலாளர் அறிவிக்க வேண்டமா? அமித் ஷா இந்தியில் அறிவிப்பு வெளியிட அதிமுக பொதுச் செயலாளர் அதை சிரித்து ஆமோதித்துக்கொண்டிருந்தார். தமிழ் நாட்டில் பாஜகவுடன் கூட்டணி என்பதை எடப்படியார்தானே அறிவித்திருக்கவேண்டும் என்று அவரது கட்சியினரே புகைச்சல் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.