தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்துவந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அதனால் முற்பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3.30 மணிவரை அத்தியாவசியத் தேவைகளைத் தவிர யாரும் வெளியில் செல்லவேண்டாம் என்றும் கூறி இருந்தது. வெயிலின் தாக்கம் திரித்து இருக்கும் இந்த நிலையில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் நலனைக் கருதி தேர்வுகளை முன்கூட்டியே நடத்தலாமா என்று தொடக்கக்கல்வி இயக்குனரகம் ஆலோசித்து வந்தது.
வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், 1 முதல் 5ம் வகுப்பு வரை முன்கூட்டியே ஆண்டுத் தேர்வு நடைபெறும் எனவும் அதன்படி ஏப்ரல் 7ம் தேதி தேர்வு தொடங்கி 17ம் தேதி முடிவடைகிறது எனவும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: –
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் உத்தரவின்படி, தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதன்படி, 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்படுவதால் தேர்வுகள் முடிந்தபின்னர் இளம் மாணவர்கள் வெயிலில் இருந்து பாதுகாப்பாக பெற்றோரின் நேரடி மேற்பார்வையில் இருப்பார்கள்.