பா.ஜ.க.,- அ.தி.மு.க., கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணையும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தவெகாவையும் இந்த கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுகள் தொடங்கி உள்ளன.
தற்போது தமிழகத்தில் பா.ஜ.க.,- அ.தி.மு.க., கூட்டணி உருவாகி விட்டது. இவர்களுடன், பா.ம.க., தே.மு.தி.க., சசிகலா, டி.டி.வி., ஓ.பி.எஸ்., தமிழ்மாநில காங்., என ஏற்கனவே இருந்த அத்தனை பேரும் இணைகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியும் இக்கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி நி்ர்வாகிகள் இந்த முறை கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்துவதால், சீமான் கிட்டத்தட்ட கூட்டணியில் சேர முடிவு எடுத்து விட்டார் என கூறப்படுகிறது.
இத்தனை பேர் சேர்ந்தாலும், தி.மு.க., கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு வெற்றி கிடைக்குமா? என்பது சந்தேகம்.
காரணம் தி.மு.க., கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. அந்த கட்சிக்கு ஆயிரம் ரூபாய் ஓட்டுகள் கிட்டத்தட்ட 2 கோடி உள்ளது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வருகிறதே தி.மு.க., அந்த ஓட்டுகள் தான் தி.மு.க.,விற்கு மிகவும் பலமாக நிற்கின்றன. இது தி.மு.க.,வின் மிகப்பெரிய பலம்.
தவிர தமிழகத்தில் மிகவும் வலுவான உட்கட்சி கட்டமைப்பு வைத்துள்ள கட்சியாக தி.மு.க., உள்ளது. தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகளின் உட்கட்டமைப்பும் சிறப்பாக உள்ளது. இந்த உட்கட்டமைப்பு தான் ஓட்டுக்களை கொண்டு வந்து பெட்டியில் சேர்க்கும் பலம் கொண்டவை. இது தவிர தமிழகத்தில் பணம் வாங்கிக் கொண்டு 30 சதவீதம் பேர் தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க தயாராக உள்ளனர்.
இவர்களின் பட்டியலும் தி.மு.க.,விடம் உள்ளது. ஆட்சியில் ஏகப்பட்ட குறைபாடுகள், அத்துமீறல்கள், நிர்வாக சீர்கேடுகள், ஊழல்கள், வழக்குகள் என எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், தலைமை மீதான நம்பிக்கையால் தி.மு.க.,வின் ஒட்டுவங்கியை இதுவரை இந்த குறைபாடுகள் பாதிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இப்போது பா.ஜ.க., கூட்டணிக்கு தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகளையும் கொண்டு வர வேண்டும். அப்படி எதிர்ப்பு ஓட்டுகளையும் கொண்டு வந்தால் மட்டுமே தி.மு.க., கூட்டணியை வரும் சட்டசபை தேர்தலில் வீழ்த்த முடியும். இப்போதைய நிலையில் தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகள் பா.ஜ.க., கூட்டணிக்கு வருகிறதோ இல்லையோ… நிச்சயம் விஜய்யை நோக்கிச் செல்லும்.
விஜய் கணிசமாக ஓட்டு வாங்குவாரே தவிர பெரிய வெற்றியை பெற மாட்டார். ஆனால் விஜய்யை பா.ஜ.க., கூட்டணிக்கு கொண்டு வந்து, தமிழகத்தில் இருமுனை போட்டியை ஏற்படுத்தினால் தி.மு.க., எவ்வளவு முயற்சித்தாலும், எளிதில் வீழ்த்தி விட முடியும் என பா.ஜ.க., கணக்கு போட்டுள்ளது. இதுவும் சரியாகத்தான் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் த.வெ.க., உடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒருமுறை தி.மு.க., வென்று விட்டால், தமிழகத்தில் எல்லா கட்சிகளையும் அழித்து விடும். குறிப்பாக விஜய் தி.மு.க., எதிர்ப்பு அரசியலில் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் தாக்குப்பிடிப்பதே சிரமம். எனவே வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால் எளிதில் மற்ற கட்சிகள் வளர்ந்து வலுவாகி விடும் எனவும் த.வெ.க., நிர்வாகிகளிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கத்தை த.வெ.க.,வினரும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும் கூட்டணி குறித்த உறுதியான பதில்களை தெரிவிக்கவில்லை.ஒருவேளை த.வெ.க., கூட்டணிக்கு வராவிட்டால் மாற்றுத்திட்டத்தையும் பா.ஜ.க., கையில் எடுத்துளளது. அந்த திட்டப்படி தி.மு.க., கூட்டணியை உடைத்து சில கட்சிகளை த.வெ.க., உடன் சேர்த்து மும்முனை போட்டியாக உருவாக்குவது என்பது தான். இதற்கான மறைமுக வேலைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி மீதான பல்வேறு விமர்சனங்கள், செங்கோட்டையனின் டில்லி பஞ்சாயத்து, அண்ணாமலை தப்புவாரா? இல்லையா? என பல அரசியல் சூறாவளிகள் தமிழகத்தை சூழ்ந்துள்ள நிலையில், பா.ஜ.க.,வின் இந்த புதுரூட்டும் புயலைக் கிளப்பி உள்ளது.
சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பின்னர்தான் தி.மு.க., தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கும். எப்படியோ வரும் சட்டசபை தேர்தல் முடியும் வரை தமிழகம் அதகளப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
-மா.பாண்டியராஜ்