திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க.,வில் நடந்த அடிதடி குறித்து எந்த மீடியாவும், சோசியல் மீடியாவும் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. இதே சம்பவம் தி.மு.க.,வில் மட்டும் நடந்திருந்தால்… பல கோடி விதமான விமர்சனங்கள் வந்திருக்கும்…. அது இருக்கட்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
தற்போது திருவண்ணாமலை அ.தி.மு.க., மாவட்டச் செயலாளராக இருப்பவர் ராமச்சந்திரன். முன்னாள் அமைச்சரான இவர், வைத்தது தான் இங்கு எல்லாமே என்பது எழுதப்படாத சட்டம். இதே மாவட்டத்தில் அம்மா பேரவை மாவட்ட துணைத்தலைவராக இருப்பவர் ஆறுமுகம். இவர் பெரிய அளவில் கட்சிப்பதவிகளிலோ… அரசு பதவிகளிலோ இருக்கவில்லை. கட்சிக்கு பணி செய்வது மட்டும் என்று தீவிரமாக அ.தி.மு.க.,விற்காக உழைத்த ஒரு பெரும் விசுவாசி. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க இவர் பெரிய அளவில் அறிமுகம் ஆனவர்.
எந்த பதவியும் வகிக்காமல், கட்சி முழுக்க அனைவரிடமும் நெருக்கமாக பழகி ஆளுமை செய்து வந்தவர் ஆறுமுகம். இதனாலேயே இவர் மீது தலைமை நிர்வாகிகளுக்கு ஒரு கோபம் இருந்து வருகிறது. குறிப்பாக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரனுக்கு இவர் மீது தனிக்காண்டு. இதனால் இவரை ஓரங்கட்டத்தொடங்கினார்.
கட்சியில் தகுதியில்லாதவர்களுக்கும், திடீர் தலைவர்களுக்கும், பெரும் வழக்குகளில் சிக்கியிருப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அப்படி ஒரு பெரிய குற்ற வழக்கில் சிக்கி இருப்பவர் ஞானசவுந்தரி. இவர் வழக்கமாகவே வாயால் பேசும் நபர் இல்லை. எடுத்ததும் கை நீட்டி தாக்குதல் நடத்தும் அளவுக்கு வலிமையான வல்லமையான ஒரு பெண் தலைவர்.
இவர் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமச்சந்திரனின் தீவிர விசுவாசி. இதனால் ராமச்சந்திரன் எப்போதுமே ஞானசவுந்திரிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்த விஷயம் திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க கட்சிக்குள் புகைச்சலை கிளப்பி வந்தது. இப்படிப்பட்ட நிலையில், இக்கட்சிக்குள் பொதுவெளியில் பல ஆயிரம் பேர் முன்னிலையில் நடந்த ஒரு அடிதடி பெரும் அளவில் விவாதப்பொருளாக மாறி உள்ளது.
கடந்த வாரம் தி.மு.க., அமைச்சர் பொன்முடி பெண்களை பற்றி ஆபாசமாக பேசியதை கண்டித்து அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவண்ணாமலையில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்ட மேடையில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தனது ஆதரவாளர்கள் ஞானசவுந்தரி உட்பட குறிப்பிட்ட சிலரை மட்டும் ஏற்றினார்.
இதனை கவனித்த ஆறுமுகம், ‘என்னப்பா… கட்சி இப்படி போயிக்கிட்டு இருக்கு. நியாயம் கேட்டு நடக்குற ஒரு ஆர்ப்பாட்டத்திலேயே இப்படி ஒரு அநியாயம் நடந்துக்கிட்டு இருக்கு. கட்சிக்கு சம்மந்தம் இல்லாதவர்களை மேடையில் ஏற்றி உள்ளார்கள்’ என கேட்டுள்ளார். அடுத்த நொடி ஞானசுந்தரி பளார் என ஆறுமுகம் கன்னத்தில் அறைந்தார்.
என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் ஞானசவுந்திரியின், உடன் வந்தவர்கள் செல்வம், பூங்காவனம், நீலகண்டன் என பலரும் ஆறுமுகத்தை அடித்து துவைத்து எடுத்து விட்டனர். இதெல்லாம் திட்டமிட்டு செய்ததை போல் மாவட்ட செயலாளர் தன் கண் முன் நடந்த இந்த அநியாயத்தை கண்டு கொள்ளாமல் இருந்தார்.
அடிதடியில் பலத்த காயமடைந்த ஆறுமுகம், தற்போது அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அடிதடி விவகாரத்தை அ.தி.மு.க., அப்படியே மூடி மறைத்து விட்டது. மீடியாக்களும் இந்த அராஜகம், அடிதடி பற்றி பெரிதாக செய்திகள் வெளியிடவில்லை.
இதனைக் கண்டு தி.மு.க.,வும் மௌனம் சாதித்து வருகிறது.
ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் தி.மு.க., நியாயப்படி இந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்து, ஞானசவுந்தரி, செல்வம், பூங்காவனம், நீலகண்டன் உட்பட அத்தனை பேரையும் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் தி.மு.க., மௌனம் காத்து வருகிறது. இதற்கும் பெரிய அரசியல் காரணம் உள்ளது.
காரணம் இந்த சம்பவம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார் மாவட்டங்களில் அ.தி.மு.க.,வில் கடும் புயலை கிளப்பி உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நிலையிலேயே இவர்கள் இவ்வளவு அராஜகம் செய்கின்றனரே… இவர்களிடம் அதிகாரம் கொடுத்தால், நாமெல்லாம் வாழவே முடியாது… என அ.தி.மு.க., நிர்வாகிகளின் செயல்பாடுகளை பற்றி அ.தி.மு.க.,வினரே கடும் விவாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
ஏற்கனவே திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார் மாவட்டங்களில் உள்ள அத்தனை சட்டசபை தொகுதிகளையும் தி.மு.க., அமைச்சர் வேலு கைப்பற்றி உள்ளார். அ.தி.மு.க.,வில் நடந்த இந்த உள்கட்சி சண்டையினை போலீசாரை வைத்து, வழக்கு பதிவு செய்து, நாம் தீர்த்து வைக்க வேண்டாம். அப்படியே விட்டு விட்டால் சண்டை பெரிதாகும். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மீதான அதிருப்தியும், அ.தி.மு.க.,வில் கோஷ்டிகளும் பெருகட்டும்.
இந்த சண்டை வலுத்தால் தேர்தல் களம் நமக்கு சாதகமாக மாறும் என தற்போதைய தி.மு.க., அமைச்சர் எ.வ.வேலு இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார். எல்லாம் அரசியல் தானே…?! எடப்பாடி பழனிசாமி, கோஷ்டிகளை கட்டுப்படுத்தி, கட்சிக்குள் வளர்ந்திருக்கும் தேவையில்லாத களைச்செடிகளை அகற்றி, தேர்தல் களத்தில் வெற்றியை அறுவடை செய்யப்போகிறாரா? அல்லது மூன்று மாவட்டத்தையும் அப்படியே சுளையாக துாக்கி எ.வ.வேலுவிடம் கொடுக்கப்போகிறாரா என பார்க்கலாம்.
“அட நீங்க வேற..அவராவது களை எடுப்பதாவது..? பாஜக கூட்டணி அறிவிப்புக்குப்பின்னர் ஆட்சியே கைக்கு வந்திட்டதுபோல பேசத் தொடங்கிவிட்டார் என்கிறார்கள் கட்சியினரே.
– மா.பாண்டியராஜ்