கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை குடியிருப்பில், 77 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம் கரிக்காலியில் செட்டிநாடு சிமெண்ட் ஆலை உள்ளது. இங்கு பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு, ஆலை அருகிலேயே குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு, ஜன.9ம் தேதி இரவு புகுந்த கொள்ளையர்கள், வீடுகளில் ஆட்கள் இல்லாத, வெளியூர் சென்றவர்களின் வீடுகளை குறிவைத்து, பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இதில் கார்த்திகேயன், வேல்முருகன், கருப்பையா, தாமரைக்கண்ணன், பழனிச்சாமி, கவியரசன் ஆகிய 6 பேரின் வீடுகள் குறிவைக்கப்பட்டு, வீடுகளில் இருந்த 77 பவுன் நகை, முக்கால் கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1.30 லட்சம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இதே சிமெண்ட் ஆலை குடியிருப்பில் கடந்த ஆண்டு, 170 பவுன் நகை திருடுபோனநிலையில், தற்போதும் 6 வீடுகளில் 77 பவுன் நகை திருடு போனது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. பிரதீப் குமார், வேடசந்தூர் டி.எஸ்.பி., பவித்ரா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர்கள் குஜிலியம்பாறை முருகன், வேடசந்தூர் வேலாயுதம், வடமதுரை கண்ணன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக அங்கிருந்த சி.சி.டிவி., கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், குஜிலியம்பாறை எஸ்.ஐ., கணேசன் தலைமையில், 10 பேர் கொண்ட தனிப்படை பிரிவினர், மத்திய பிரதேசம் விரைந்தனர்.
அங்கு நடத்திய தேர்தல் வேட்டையில், முக்கிய குற்றவாளியான மத்திய பிரதேசம் மாநிலம், தார் மாவட்டம், தண்டா கிராமத்தைச் சேர்ந்த திலீப் மகன் கலாம் 24 என்பவரை தேடி சென்றனர். தீவிர விசாரணையில்,
அவர் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஓசூர் வந்த போலீசார், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்றிருந்த கலாம் என்பவரை கைது செய்தனர். குஜிலியம்பாறை ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்த போது, உண்மையை ஒத்துக் கொண்ட அவரிடம் இருந்து, 12 பவுன் நகை மட்டுமே மீட்கப்பட்டது. எஞ்சியவர்கள் குறித்து விசாரித்து வந்த நிலையில், திடீரென கலாம் தப்பியோட முயன்றதை தொடர்ந்து, அவரது இடது காலில் அடிபட்டு கீழே விழுந்தார்.
அவரை மீட்ட போலீசார் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த வழக்கு குறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி., பவித்ரா கூடுதல் கவனம் செலுத்தி விசாரித்து வருகிறார்.