வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.
தை மாதம் வரும் பூச நட்சத்திரத்தன்று, ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இங்கு தைப்பூச ஜோதி தரிசன விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்.
இந்நிலையில் 154வது ஆண்டு தைப்பூச விழா இன்று நடைபெறுகிறது.
இதனால் நேற்று கொடி ஏற்றத்துடன் விழா சிறப்பாக தொடங்கியது. மேலும் வள்ளலார் பிறந்த மருதூர் தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், வடலூர் சத்திய தர்மச்சாலையிலும் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாளை ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதன்படி காலை 6 மணிக்கு முதல் காலம் ஜோதி தரிசனமும், பின்னர் காலை 10, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் 12 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
தைப்பூச ஜோதி தரிசன விழா முடிந்த பின்னர், 13ஆம் தேதி வியாழக்கிழமை மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி பலாக மாளிகையில் திரு அரை தரிசன பெருவிழா நடைபெற உள்ளது.
விழாவுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம் காண வருவார்கள் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.