சேலம் அம்மாபேட்டையில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.500 வசூலித்த விவகாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறக்கட்டளை நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அறக்கட்டளை நிர்வாகியை விடுவிக்க வேண்டும் எனக்கோரி பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் சேலம் கோட்டை மைதானத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அம்மாப்பேட்டை சிவகாமி திருமண மண்டபத்தில் அன்னை தெரசா மனிதநேய அறக்ட்டளையில் பணம் இரட்டிப்பு தருவதாக ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு உள்ளிட்ட 4 போரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து அரசு வங்கி கணக்கில் ஒப்படைத்துள்ளனர். மேலும் அறக்கட்டளை நிர்வாக வங்கி கணக்கையும் முடக்கி உள்ளனர்.
இந்நிலையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று காலை திரண்டனர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விஜயபானு உள்ளிட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், அறக்கட்டளை நிர்வாகிகள் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்தனர். மேலும் கொடுத்த பணத்திற்கு கூடுதலாக பணம் கொடுத்து வந்தனர். இதுவரை யாரையும் ஏமாற்றவில்லை. ஆனால் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். அவர்களை வெளியே விட்டால் போதும் எங்கள் பணத்தை அவர்களிடமே வாங்கிக்கொள்வோம் என்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த சேலம் மாநகர் காவல் துணை கமிஷனர் வேல்முருகன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீசாரிடம் அறக்கட்டளை நிர்வாகியை விடுதலை செய்யக்கோரி வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது துணை கமிஷனர் வேல்முருகன், தமிழகம் முழுவதும் இதுபோல் பலர் மோசடி செய்துள்ளனர். முதலில் 10 பேருக்கு அவர்கள் சொன்னபடி பணத்தை தருவார்கள் ஆயிரக்கணக்காணவர்களிடம் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி விடுவார்கள். பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதற்கு அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதியை பெறவேண்டும். இந்த அறக்கட்டளை நிர்வாகிகள் பெறவில்லை என்பதால் அவர்களை கைது செய்துள்ளோம் என விளக்கமளித்தார். பின்னர் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.