மே 5ம் தேதி வணிகர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
கடலூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா நிருபர்களுக்கு தெரிவித்ததாவது:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42வது மாநில மாநாடு வருகிற மே 5ம் தேதி, சென்னை அருகே உள்ள மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது.
இதற்காக மிகப் பிரமாண்டமான பணிகள் மேற்கொண்டு விழா குழுவினர் செய்து வருகின்றனர். இந்த மாநாடு 57 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல்வேறு வரிகள் மூலமாக வணிகர்கள் நஷ்டமடைந்து வருகின்றனர்.
ஏற்கனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு வியாபாரிகள் தவித்துக் கொண்டு வருகின்றனர். இதேபோன்று மாநில அரசு குப்பை வரி, தொழில் வரி, பணிபுரியும் ஊழியர்களுக்கான வரி என பல்வேறு வரிகளை வியாபாரிகள் செலுத்தி வருகின்றனர்.
மேலும் லைசன்ஸ் கட்டணம் வணிக கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதேபோல் ஏற்கனவே வீட்டு வரி, மின்சார கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது இதன் மூலம் வணிகர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு விடுதலை வேண்டும் என்ற நோக்கில் வரும் மே 5ம் தேதி வணிகர்கள் உரிமை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும் இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில் குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் 15000 வணிகர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு சலுகைகள் அறிவிக்கும் மாநாடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மண்டல தலைவர் சண்முகம், கடலூர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.