முதுகலை மருத்துவ மாணவர் இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
முதுநிலை மருத்துவப் படிப்பு, வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்தினால், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன், மாநிலத்தின் உள்ஒதுக்கீடுகள் பாதிக்கப்படும்.
எய்ம்ஸ், ஜிப்மர் போன்றவற்றில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஒதுக்கீடு செல்லும் என்றும், மாநிலத்தில் வசிப்பிடம் ரீதியாக எந்த ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மருத்துவக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எம்.டி.எம்.எஸ்., டிப்ளமோ போன்ற இடங்கள் 2,294 இருக்கிறது. அந்த வகையில், தமிழக மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில், 1,207 மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
அகில இந்திய இடஒதுக்கீட்டில் 1,080 பேர் மருத்துவம் பயில்கிறார்கள். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம், தமிழகத்திற்கான 1,207 இடங்கள் பறிபோகும் சூழல் உருவாகும். அதுமட்டுமல்லாமல், மாநில உரிமைகளும் பாதிக்கப்படும்.
இந்த ஆண்டுக்கான மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையின் இரு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், 3வது சுற்று நடைபெற உள்ளது. இந்த தீர்ப்பினால், இந்த ஆண்டு எந்த பாதிப்பும் இருக்காது.
தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுநகர்களுடன் ஆலோசனை நாதத்தை வருகிறோம். விரைவில் மாநில உரிமைகள் பாதிக்கப்படாமல், தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட உள்ளது.’ இவ்வாறு அமைச்சர் கூறினார்.