சங்கராபுரம் அருகே பைக் வாங்கித் தராத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள கல்வராயன் மலைப்பகுதி அடிவாரத்தில் உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் -அபரஞ்சம் தம்பதியினர்.
இவர்களுக்கு மாதேஸ்வரன் ராகுல் மற்றும் கோகுல் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகனான மாதேஸ்வரன் பி.பி.ஏ, கல்லூரி படிப்பு முடித்துவிட்டு, கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாதேஸ்வரன் தனது தாய் தந்தையிடம் எனக்கு ஆர்-15 விலை உயர்ந்த பைக் வாங்கிக் கொடுங்கள் என்று நீண்ட நாட்களாக கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தந்தை நடேசன் சிறிது காலம் கழித்து சோளம் அறுவடை செய்து முடித்தவுடன் வாங்கிக் தருகிறேன் என கூறியுள்ளார். அதற்கு மாதேஸ்வரன் கடந்த இரண்டு நாட்களாக அடம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த மாதேஸ்வரன் பெற்றோர்களான நடேசன் மற்றும் அபரஞ்சம் காட்டிற்கு வேலைக்குச் சென்ற நேரத்தை பயன்படுத்தி தனது தாயின் சேலையில் பரிதாபமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கித்தர மறுத்ததால் விரக்தியில் மாதேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் மாதேஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றபோது, அவரது பெற்றோர்களும் உறவினர்களும் எங்களது மகனின் பிரேதத்தை எடுத்துச் செல்ல வேண்டாம் என காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 4 மணி நேரத்திற்குப்பின், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகனின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், மாதேஸ்வரன் உடலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பைக் வாங்கித்தராத விரக்தியில் தாயின் சேலையில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.