சென்னை புழல் மத்திய விசாரணை சிறையில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பார்க்க உறவினர்கள், நண்பர்கள் என தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்வது வாடிக்கை. இவர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை சிறை துறையினர் ஆய்வு செய்து உரிய கைதிகளிடம் வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் இருவேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோபிநாத், ஆனந்த்ராஜ் ஆகியோரது உறவினர்கள் இவர்களை பார்ப்பதற்காக சோப்பு, உணவுப் பொருட்கள் உடைகள் கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் இவற்றை சிறை காவலர்கள் சோதனை செய்தபோது குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு ஆகியவற்றில் மறைத்து 31 கிராம் கஞ்சா வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
இது குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகார்களின்பேரில், புழல் போலீசார் சிறை கைதிகள், கோபிநாத், ஆனந்த்ராஜ் பார்வையாளர்கள் நந்தகுமார், ரேவதி, அன்பழகன், சந்தியா என 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.