சங்கராபுரம் அருகே நிலத் தகராறு புகாரளித்த பெண்ணிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன் மனைவி சின்ன பொண்ணு. இவருக்கு ராவத்தநல்லூர் கிராம எல்லையில் விவசாய நிலம் உள்ளது. அதன் அருகாமையில் ஏரி புறம்போக்கு இடத்தையும் அவர் ஆக்கிரமிப்பு செய்து கடந்த 40 ஆண்டுகளாக பயிரிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலத்தை வெங்கடேசன் என்பவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் சில பொய்யான ஆவணங்கள் தயார் செய்து தென்முடியனூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சின்னப்பொண்ணு வட பொன்பரப்பி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அப்போது உதவி காவல் ஆய்வாளர் சண்முகம் இவரை ஆபாசமாக பேசியுள்ளார். இதன் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உதவி காவல் ஆய்வாளர் சண்முகத்தை அதிரடிப்படைக்கு பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.