நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் இனிப்பு வழங்கி நேற்று கொண்டாடினர்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்டரங்கில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன் தலைமையில் நடந்தது. தாசில்தார் துரைராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) பிரித்திவி ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோபு ஆகியோர் முன்னிலை வகிக்க, உதவி இயக்குநர் (வேளாண்) முத்துராமன் வரவேற்றார்.
ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட நந்தன் கால்வாய் திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்று, கட்சி சார்பற்ற விவசாய சங்க மாவட்ட செயலாளர் நார்த்தாம்பூண்டி சிவா, ஏரி பாசன சங்க தலைவர் சரவணன் ஆகியோரது தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அரசு அலுவலர்கள் வேளாண் பிரதிநிதிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும் இத்திட்டத்திற்கு துணைபுரிந்த அமைச்சர் எ.வ.வேலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோருக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
முடிவில், உதவி இயக்குநர் (வேளாண்) கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.