விளையாட்டுத் துறைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக அமைச்சர் அர.சக்கரபாணி பாராட்டு தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆங்கில நாள் விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை ஏற்று பேசியதாவது:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்தும் வகையில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது சிறந்த முன்னெடுப்பான செயலாகும்.
இதன்மூலம் ஆண்டுதோறும் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் உயர்கல்வி, வெளிநாடுகளில் பணி வாய்ப்பு பெறும்போது ஆங்கில மொழி தேவையான ஒன்றாக உள்ளதாக ஆட்சியர் பேசினார்.
தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தமிழ்நாட்டில் 75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்துள்ளார். மாணவ, மாணவிகள் இதுபோன்ற பயிற்சிகளை நல்ல முறையில் பயன்படுத்தி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர் பதவிகளை அடைய வேண்டும். மாணவ, மாணவிகளின் எண்ணங்கள் வானளாவிய அளவில் இருக்க வேண்டும். கடின உழைப்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் எதிலும் சாதிக்கலாம்.
தமிழ்நாட்டில் 22 சிறு விளையாட்டு மைதானங்கள் அமைக்க அறிவிக்கப்பட்ட நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி ஆகியற்றிற்கு தலா ஒரு சிறு விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொப்பம்பட்டியில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்க ஏற்கனவே அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர்கள், வீடால்க் பயிற்சி ஆசிரியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா, ஒட்டன்சத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜாமணி, முக்கிய பிரமுகர்கள் பொன்ராஜ், சுப்பிரமணியன், பி.சி.தங்கம் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.