திண்டிவனம் அருகே சட்டவிரோதமாக இயங்கி வந்த இருசக்கர வாகன ஆயில் நிறுவனத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மொளசூர் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தும் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், அப்பகுதியில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் அப்பகுதியில் சட்ட விரோதமாக ஆயில் நிறுவனம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர் இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் ஆயிலை தரமற்ற முறையிலும், சட்ட விரோதமாகவும் தயார் செய்து விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், செங்கல்பட்டு, ஆரணி, புதுச்சேரி திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும், இந்த சட்ட விரோத ஆயில் நிறுவனம் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து நிறுவனத்தில் விற்பனைக்காக சிறு சிறு கேன்களில் அடைத்து வைத்திருந்த ஆயிரம் ஆயில் கேன்கள் மற்றும் 27 பேரல்களில் இருந்த ஆயிலையும் கிளியனூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து உரிமையாளரான முருகனை போலீசார் கைது செய்தனர்.