18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் இளைஞர்களிடையே ஆன்லைன் சூதாட்ட மோகம் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் ஆங்காங்கு நடந்து வருகின்றன.
அவ்வாறு ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகளை கடுமையாக்கி தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் விதிகளை கடுமையாக்கியுள்ளது.
இந்த நடவடிக்கைகளை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையிலான ஆன்லைன் கேமிங் ஆணையம் எடுத்துள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் கேமில் பயனர்களை அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் விளையாடுபவர்கள் யார் என்பது குறித்து கண்டிப்பாக நிறுவனங்கள் கே.ஒய்.சி. வாங்க வேண்டும்.
ஆதார் மற்றும் ஓடிபி மூலம் ஆய்வு செய்து விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டில் தினம், வாரம், மாதம் எவ்வளவு பணம் செலவாகிறது என்று விளையாடுபவர்களுக்கு ஆன்லைன் நிறுவனங்கள் கணக்குத் தர வேண்டும்.
Online gaming is addictive in nature என்பது போன்ற எச்சரிக்கையை ஆன்லைன் விளையாட்டு செயலியில் இடம்பெறச் செய்ய வேண்டும். ஆன்லைனில் விளையாடுவோருக்கு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும் என்று பல கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் மூலமாக உத்தரவிடப்பட்டுள்ளது.