ஏற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாம்தமிழர் கட்சியிலிருந்தும் கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர்.
இந்நிலையில் நாம்தமிழர் கட்சியின் சேலம் தெற்கு மாவட்ட பொருளாளர் சங்கர் தலைமையில் ஏற்காடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகுவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் சதிஸ்குமார் கூறியதாவது:
சேலம் தெற்கு மாவட்ட பொருளாளர் சங்கர் தலைமையில், ஏற்காடு தொகுதி துணைத் தலைவர் சடையன், தொகுதி துணைச் செயலாளர் பெரியசாமி, அயோத்தியாபட்டினம் ஒன்றிய பொறுப்பாளர் கூட்டாத்துப்பட்டி கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் தேவேந்திரன், விக்னேஷ், மகளிர் பாசறை பொறுப்பாளர் நித்யா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் நாம்தமிழர் கட்சி பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக் கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சியில் கொள்கை கோட்பாடு என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. ஆதித்தமிழர் விடுதலை இல்லாது மீதித்தமிழர் வெல்லாது என்கிற கோட்பாட்டை பெயரளவிற்கு மட்டுமே மேடையில் பேசுகிறீர்கள். ஆனால் உண்மையில் கட்சியில் பொறுப்பு என்று வரும் பொழுது கட்சிக்காக உழைத்த, தங்களின் சொந்த உழைப்பால் பொருளாதாரத்தை இழந்த அருந்ததியர்களை புறந்தள்ளி ஒதுக்கி வைக்கிறார்கள். இது எங்களுக்கு கடும் மன உளைச்சலை தருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று செயற்பாட்டு வரவை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு என்ன செயல் திட்டம் வகுத்தார்கள் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.