ஒட்டன்சத்திரத்தில் உள்ள பழனி உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி உதவி கலெக்டர் கிஷன்குமார் இருந்து வருகிறார். இவரது நேர்முக உதவியாளராக ஒட்டன்சத்திரத்தில் சிக்கந்தர்நகரில் வசித்து வரும் முத்துச்சாமி என்பவர் பணியாற்றி வருகிறார். முத்துச்சாமி இதற்கு முன்பு ஒட்டன்சத்திரம் தாசில்தாராக பணியாற்றி வந்தார்.
ஒட்டன்சத்திரம் தாசில்தாராக பணியாற்றியபோது முத்துச்சாமி மற்றும் அவரது மனைவி சத்தியா ஆகியோர் மீது வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஒட்டன்சத்திரத்தில் சிக்கந்தநகரில் உள்ள முத்துச்சாமியின் வீட்டுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரூபாகீதாராணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீட்டிற்குள் புகுந்து மெயின் கேட்டை பூட்டியும், வீட்டிற்குள் இருந்த அனைவரின் செல்போன்களை பறிமுதல் செய்தும் அனைத்து அறைகளிலும் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது சொத்து மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
தொடர்ந்து 6 மணி நேர சோதனைக்கு பிறகு முக்கிய ஆவணங்களுடன் அங்கிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் புறப்பட்டுச்சென்றனர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது, சொத்து குவிப்பு புகார் சம்பந்தமாக சோதனை நடத்தி விசாரணை நடத்தப்பட்டதாகவும், கைது நடவடிக்கை எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
எந்த வகையான ஆவணங்கள், பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்பதை போலீசார் கூற மருத்துவிட்டனர்.
இச்சம்பவத்தால் ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.