ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால், ஆட்டோக்களுக்கு நாளை முதல் தாங்கள் உயர்த்தி அறிவித்த கட்டணத்தை வசூலிப்போம் என்று ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு அரசு சார்பில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தைத் திருத்தியமைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பாக அரசுடன் ஆலோசித்து முடிவெடுக்கும்படி கடந்த 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆட்டோ ஓட்டுநர் கூட்டமைப்பினரே கட்டணத்தை மாற்றியமைத்துள்ளனர். நாளை (பிப்ரவரி 1ம் தேதி) முதல் ஆட்டோக்களுக்கு 1.8 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், கூடுதல் கிலோ மீட்டருக்கு 18 ரூபாயும் வசூலிப்பதற்கு ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுளளது.
ஆனால், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. ஆட்டோக்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் என்றும் அதனடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஜாஹீர் உசேன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது,
ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் 1.8 கிலோ மீட்டருக்குள் வரும் சவாரிகளுக்கே 60 ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை ஓலா, உபர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
தங்களது கூட்டமைப்பின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்து போக்குவரத்துத் துறை அமைச்சர், உள்துறைச் செயலாளர், போக்குவரத்துத் துறை ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் சுமூக பேச்சு நடத்தி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்படாவிட்டால் இன்று முதல் நாங்கள் அறிவித்த கட்டணத்தை வசூல் செய்வோம் என்று ஜாஹிர் உசேன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஆட்டோக்களுக்கு 1.8 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், கூடுதல் கிலோ மீட்டருக்கு 25 ரூபாயும் நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆட்டோ கட்டண உயர்வை அமல்படுத்தக் கோரி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.