தவெக தலைவர் விஜய், அறையில் அமர்ந்து பேசுவதைவிட்டுவிட்டு, மக்களைச் சந்திக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தேமுதிக மாவட்டச் செயலாளரின் இல்லத் திருமண விழாவில் பிரேமலதா பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “செந்தூரப் பாண்டியன் படத்தில் விஜய்யை தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவர் விஜயகாந்த். ஆனால், சினிமா வேறு, அரசியல் வேறு என்று விஜய்யிடமே பலமுறை நேரடியாக சொல்லியிருக்கிறேன். இருந்தாலும் அவர், திரைத்துறையில் அவ்வளவு பெரிய வணிகத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார். அதற்கு எனது பாராட்டுகள்.
விஜய் என்ன சாதிக்கப்போகிறார் என்பதை பார்க்க நாங்களும் காத்திருக்கிறோம். முதலில் அவர் அறையில் அமர்ந்து பேசுவதை விட்டுவிட்டு பொதுவெளிக்கு வந்து மக்களையும், பத்திரிகையாளர்களையும் சந்திக்க வேண்டும். மக்கள் பிரச்சனையை கையில் எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் நம்மால் நிலைத்து நிற்க முடியும். இதை விஜய்யிடமே சொல்லியிருக்கிறேன். எனவே அவரின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தெரிவித்தார்.