திட்டக்குடி அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த வயதான பெண்மணியிடம் 12 பவுன் தாலிச் செயினை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த மேல் ஐவனூர் கிராமத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் மனைவி செல்வராணி (53). இவர் தனது சொந்தமான மாடுகளை மேய்ப்பதற்காக வழக்கம்போல் திட்டக்குடி செல்லும் சாலையில் வெலிங்டன் ஏரியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதிக்கு வந்த மர்மநபர்கள் செல்வராணியின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் நிலை தடுமாறு கீழே விழுந்த செல்வராணி கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள், அவர் அணிந்திருந்த 12 பவுன் தாலிச் செயினை மர்மநபர்கள் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றுள்ளனர்.
கீழே விழுந்த செல்வராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலின்பேரில் அங்கு விரைந்த ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவுசெய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.