விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் விசிக முன்னாள் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, அதிமுக ஐடி பிரிவு முன்னாள் இணை செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் இணைந்துள்ளனர்.
முன்னதாக நேற்று காலை, தவெக பனையூர் அலுவலகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப்பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும், அதிமுக ஐடி பிரிவின் முன்னாள் இணை செயலாளர் நிர்மல் குமாரும் அடுத்தடுத்து வந்தனர்.
ஏற்கெனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் இரண்டு கட்ட பட்டியல் வெளியான நிலையில் நேற்று மூன்றாம் கட்ட பட்டியல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தவெக அலுவலகத்தில் ஏராளமான நிர்வாகிகள் குவிந்திருந்தனர். அந்தநேரத்தில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் வந்ததால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
இவர்கள் இருவரையும் தொடர்ந்து பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு தவெக தலைவர் விஜய்யும் வருகை தந்தார். பின்னர் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில், விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் இருவரும் முறைப்படி தவெகவில் இணைந்தனர்.
மேலும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 3 துணைப் பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்பட திட்டமிடப்பட்டுளளது. அதன்படி கொள்கை பரப்புச் செயலர், கொள்கை பரப்பு இணைச்செயலர் பொறுப்புகள் கொண்டுவரப்பட்டு அந்த பொறுப்புகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமாருக்கும் தவெகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.