சேலத்தில் ரூ.42.49 கோடி மதிப்பிலான 21 புதிய திட்டப்பணிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினார்.
சேலம் வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் ரூ.42.49 கோடி மதிப்பிலான 21 புதிய திட்டப்பணிகளுக்கு நேற்று அடிக்கல் நாட்டி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:
பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் சேலம் மாவட்டத்தில் 13 அரசுப் பள்ளிகளுக்கு நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.21.66 கோடி மதிப்பீட்டிலான புதிய வகுப்பறைகள் மற்றும் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, சமூக பாதுகாப்புத் துறையின் சார்பில் சேலம் அரசு கூர்நோக்கு இல்லம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் காப்பகத்தில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் உபகரணங்களுடன் கூடிய நவீன சமையலறை உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கும், சேலம், பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் தரக்கட்டுப்பாடு ஆய்வகக்கட்டடம் கட்டும் பணிக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் வேம்படிதாளம் அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடம் கட்டும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டன.
மேலும், கூட்டுறவுத் துறையின் சார்பில் சேலம், நெடுஞ்சாலை நகர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்திற்கு ரூ. 3.98 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக அலுவலகம் கட்டும் பணிகளுக்கும், வணிக வரி மற்றும் பதிவுத்துறையின் சார்பில் சேலம், ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக வளாகத்தில் ரூ.9.84 கோடி மதிப்பீட்டில் நுண்ணறிவு கோட்டத்திற்கான புதிய கட்டடம் கட்டும் பணிகளுக்கும் என மொத்தம் ரூ. 41.59 கோடி மதிப்பீட்டிலான 20 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டன.
அதேபோன்று, அஸ்தம்பட்டி உழவர் சந்தை எதிரில் ரூ. 89.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்படவுள்ள சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கான அலுவலகக் கட்டடத்துடன் கூடிய இ-சேவை மையத்திற்கான அறை, பார்வையாளர்கள் அறை மற்றும் கணினி அறை உள்ளிட்ட புதிய கட்டடப்பணிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் பொதுப்பணித்துறையின் சார்பில் கட்டப்படவுள்ள பல்வேறு துறைகள் சார்ந்த ரூ.42.49 கோடி மதிப்பிலான 21 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
படவிளக்கம்:
சேலம் வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறையின் சார்பில் புதியதாகக் கட்டப்படவுள்ள பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினார். அருகில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.