காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழாவையொட்டி புதன்கிழமை பெருந்தேவித் தாயாரும், உற்சவர் வரதராஜப் பெருமாளும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அத்திவரதர் புகழுக்குரிய பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.முதல் நாளாக ஆலயத்திலிருந்து ஸ்ரீதேவி,பூதேவி தாயாருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு சென்றார்.
பின்னர் திரும்பி ஆலயம் வந்து நுழைவுவாயிலில் பெருந்தேவித் தாயாரையும் அழைத்துக் கொண்டு இருவருமாக அனந்தசரஸ் தெப்பக்குளத்திற்கு வந்து வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்திற்கு எழுந்தருளினர்.
அனந்தசரஸ் தெப்பக்குளத்தில் அத்திவரதர் எழுந்தருளப்பட்டுள்ள நீராழி மண்டபத்துக்கும் மற்றும் குளத்திற்கு நடுவில் உள்ள மற்றொரு நீராழி மண்டபத்தையும் தெப்பத்தில் அமர்ந்தவாறு 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தெப்பத் திருவிழாவையொட்டி வாணவேடிக்கைகளும் நடைபெற்றன. தெப்பத்திலிருந்து மீண்டும் ஆலயம் திரும்பியதும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும்,மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு)ஆர்.ராஜலட்சுமி தலைமையில் கோயில் மணியக்காரர் கிருஷ்ணகுமார் மேற்பார்வையில் கோயில் பட்டாச்சாரியார்கள்,பணியாளர்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.