ஆம்பூர் அருகே கெமிக்கல் ஏற்றி கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீப்பிடித்து புகை ஏற்பட்டது. ஓட்டுனர் சாதுரியமாக செயல்பட்டு லாரி ஓரம் நிறுத்தியதால் பேராபத்து தவிர்க்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் காணிப்பாடு கிராமத்தைச் சேர்ந்த மாது, சென்னையில் இருந்து பெங்களூருக்கு கெமிக்கல் ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது லாரிக்கு அடியில் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வருவதை அறிந்த லாரி ஓட்டுனர். சாதுரியமாக செயல்பட்டு லாரியை ஓரம் நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற ஆம்பூர் தீயணைப்பு துறையினர் லாரிக்கு அடியில் இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். லாரி ஓட்டுனரின் சாதுரியத்தால் தீயை கட்டுப்படுத்தி பேராபத்து தவிர்க்கப்பட்டது.