திருவண்ணாமலை உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.30 க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளில் அன்றாடம் பயன்படுத்துவதில் முக்கியமானது சின்ன வெங்காயமாகும். இதில் மருத்துவ தன்மை அதிகம். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து வரும் பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தின் மவுசு அதிகமாகும். திருச்சி, பெரம்பலுார் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் சின்ன வெங்காயம் மாநிலம் முழுதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
விலை அவ்வப்போது ஏறும், இறங்கும். விளைச்சல் குறைவான நாட்களில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயரும்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சின்ன வெங்காய விலை விண்ணை தொட்டது. குறிப்பாக நவம்பர் மாதம் கிலோ ரூ.120 வரையும், கடந்த மாதம் ரூ.100 வரை விற்பனையானது. தற்போது கடந்த ஒரு வாரமாக இதன் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
திருவண்ணாமலை உழவர் சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை நேற்று முன்தினம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. திடீர் விலை வீழ்ச்சியால் வெங்காயத்தை பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளும் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர
சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி குறித்து மொத்த வியாபாரிகளிடம் கேட்டபோது, மார்கழி மாதத்தில் முகூர்த்தங்கள் கிடையாது.
விற்பனையும் ‘டல்’ அடித்தது. தற்போது திருச்சி மார்க்கெட்டில் இருந்து அதிகளவு வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. இதனால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. வரும் நாட்களில், குறிப்பாக பொங்கல் பண்டிகை நாட்களில் தேவை அதிகரிப்பால் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.