சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர், சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆகியோர் கிரிவலப்பாதையில் உள்ள குளங்கள் மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோயில் கிரிவல பாதையைச் சுற்றியுள்ள குளங்களை பாதுகாத்தல் மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் எம்.சி. சாமி ஆகியோர் நேற்று கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, கிரிவலப்பாதையைச் சுற்றியுள்ள மலையடி வாரத்தில் அக்னிலிங்கம் பகுதியில் உள்ள பாண்டேஸ்வரர் கோவில், பாண்டவ தீர்த்த குளம் மற்றும் பச்சையம்மன் கோவில் அருகேயுள்ள புதுத்தெரு ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பட்டுள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர், வழக்கறிஞர் எம்.சி.சாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி, வட்டாட்சியர் தியாகராஜன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.