ஆம்பூர் அருகே பாம்பு கடித்து 8 வகுப்பு மாணவி உயிரிழந்தார். பாம்பு கடித்தற்கான அறிகுறி இல்லை என டாக்டர்கள் தெரிவித்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பள்ளி தெரு பகுதியை சேர்ந்தவர் முரளி, கூலித்தொழிலாளி. இவரது மகள் அனு (வயது 13) இவர் உமராபாத் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8 வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பெற்றோர்களுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அனுவை பாம்பு கடித்துவிட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
பணியில் இருந்த மருத்துவர் மாணவி ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மாணவியின் உடலில் பாம்பு கடித்த தடையங்கள் எதுவும் இல்லாததால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் மாணவியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அணுவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உமராபாத் ஆம்பூர் செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ஆம்பூர் டி.எஸ்.பி. சரவணன் தலைமையிலான போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில், போராட்டத்தை கைவிட்டனர்.