திருவண்ணாமலை மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவையொட்டி தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்.
முன்னதாக மகாத்மா காந்திகளின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடு ரூ. 42 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு, குறியீட்டு இலக்கினை முழுவதுமாக எய்தப்பட்டது. நடப்பாண்டு இம்மாவட்டத்திற்கு ரூ.78 லட்சம் விற்பனை குறியீடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த குறியீட்டை முழுமையாக எய்திட வேண்டும்.
காதி கிராப்டில் இவ்வாண்டும் சிறப்பு விற்பனையாக கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ஆகிய ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கதர் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.சரவணன், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் இரா.அன்பழகன், மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.