3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை
செஞ்சி ரங்கபூபதி கலைக் கல்லூரியில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு கோல போட்டியில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள ரங்கபூபதி கலைக் கல்லூரியில் விவசாயம் காப்போம், பெண்கள் மேம்பாடு, பாரம்பரிய இசைக்கருவிகள், பாரம்பரிய விளையாட்டுகள், சமுதாயத்திற்கு ஒரு வலுவான செய்தி என்ற ஐந்து தலைப்புகளில் மெகா கோலப்போட்டி நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த கோலப்போட்டியில் செஞ்சி, திருவண்ணாமலை, சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 3000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தலைப்புகளுக்கு ஏற்றவாறு வித விதமாக கோலமிட்டனர்.
ஒவ்வொரு தலைப்பிற்கும் ஏற்றவாறு மாணவர்கள், பொதுமக்கள் கற்பனைகளை கோலமாக தீட்டியிருந்தனர்.இது அனைவரையும் கவரும் விதமாக அமைந்திருந்தது.
கோலப் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த கணேஷ் முதலிடம் பெற்று இரண்டு கிராம் தங்க நாணயம் பரிசாக பெற்றார். இதேபோன்று செஞ்சியை சேர்ந்த தேன்மொழி இரண்டாம் இடம் பெற்று ஒரு கிராம் தங்க நாணயத்தை பரிசாக பெற்றார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த ராமமூர்த்தி மூன்றாம் இடம் பெற்று வெள்ளி விளக்கை பரிசாக பெற்றார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100 பேருக்கு ஆறுதல் பரிசாக குக்கர் வழங்கப்பட்டது.
ஒரே நேரத்தில் 3006 பேர் கோலமிட்டது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு என்ற நிறுவனம் மூலமாக வழக்கறிஞர் வேன்விழி சான்றிதழ் வழங்கினார்.
சான்றிதழை கல்லூரியின் தாளாளர் ஆர்.ரங்கபூபதி செயலாளர் ஆர்.பி. ஸ்ரீபதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த மெகா கோலப்போட்டியில் இடம்பெற்றிருந் பல வண்ண கோலங்களை செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கண்டு களித்தனர்.