திருவண்ணாமலை நகராட்சி, காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம் சிறுதானிய உணவு திருவிழா – 2023 நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி விழாவை துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை நகராட்சியில் இன்று உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையுடன் Rotary Vegan சங்கம், பசுமை விகடன் மற்றும் காலீஸ்வரி ஆயில் மில் ஆகியோர் இணைந்து சிறுதானிய திருவிழாவை இரண்டு நாட்கள் நடத்துகின்றனர். திருவண்ணாமலை காந்தி நகர் மைதானம் (அமோகா ஹோட்டல் எதிரில்) நடைபெற்றது. இந்நிகழ்வில் இரண்டு உலக சாதனைகளை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 100 எண்ணிக்கையிலான சிறுதானிய மற்றும் இயற்கை முறையில் உணவு தயாரிக்கும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி பேசியதாவது:
சிறுதானிய நூற்றாண்டு விழாவானது மக்களிடையே சிறு தானியத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெற்று வருகிறது. அனைவரும் தங்கள் அன்றாட வாழ்வில் சிறுதானியத்தை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து வேளாண்மை துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் கா்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் பலவேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு சிறப்பாக செயலாற்றி வருகிறது.
பள்ளி மாணவர்கள் அனைவரும் தங்களது சிறு வயது முதலே சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு தயாரிப்பாளர்கள் சிறுதானியத்தை வைத்து காலத்திற்கு ஏற்றாற்போல் சுவை மிகுந்த உணவுகளை தயாரிக்க வேண்டும். சிறுதானியங்களில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் இப்பொழுது முதலே சிறுதானிய உணவுகளை உண்டு, எதிர்காலத்தின் ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை துணைதலைவர் கு.பிச்சாண்டி கூறினார்.
கிரிவலப் பாதையில் 2,461 அன்னதான கூடம் அமைத்து முறையான பயிற்சி அளித்து சான்று வழங்கி 23 இலட்சத்து 95 ஆயிரம் நபர்களுக்கு முறையாக அன்னதானம் வழங்கி சாதனை செய்தற்காகவும், 78 அன்னதான கூடம் சிறுதானிய உணவு வழங்குவதற்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு இலட்சத்து 30 ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கி உலக சாதனை செய்ததற்க்காகவும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் 25 நிமிடத்தில் 347 சிறுதானிய உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
15 அடி உயரத்தில் இந்திய வரைப்படம் உருவாக்கி அந்தந்த மாநிலத்தில் உற்பத்தியாகும் சிறுதானிய பொருட்களை கொண்டு இந்திய வரைப்படம் உருவாக்கியதற்காகவும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைதலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
இந்நிகழ்வில், சிவராமன், சிறுதானியத்தின் சிறப்பு பற்றியும், சுல்தான் அகமத் இஸ்மாயில், மண் நலம் மனித நலம் பற்றியும், சாய்பிரசன்னா, சிறுதானியம் இயற்கை விவசாயம் பற்றியும், தில்லைவாணன், சரக்கரை நோயை வெல்லும் பாரம்பரிய உணவுகள் பற்றியும், ப்ரியா நாராயணன் மரபு விதை சேமிப்பாளர், மரபு விதைகளின் மறுபயணம் விதை முதல் விதை வரை பற்றி நிர்மலாகுமாரி பேசினார்.
சிறுதானியத்தின் எதிர்கால முக்கியத்துவம் பற்றியும், மண்வாசனை மேனகா, நேரலை சிறுதானிய சமையல் செய்முறை விளக்கம் மற்றும் சிறுதானியத்தின் பயன்கள் பற்றியும், கோ.சித்தர் இயற்கை உணவின் மருத்துவ குணங்கள் பற்றியும், திருமாறன் செடிகளை காசாக்கும் கலை பற்றியும். சத்யராமன், உலகளவில் சிறுதானியத்தின் முக்கியத்துவம் பற்றியும், அறிவுடை நம்பி, சிறுதானியங்களின் சில சிந்தனைகள் பற்றியும், செல்வம், பூச்சிகளை புரிந்து கொள்வோம். நஞ்சில்லா உணவுக்கான நல்வழி பற்றியும் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.
மதுரை முத்து சிறப்பு பட்டிமன்றமும் லயோலா கல்லூரி மாணவர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. உணவு திருவிழாவில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை அனுமதி இலவசம்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாநில தடகள் சங்க துணைதலைவர் எ.வ.வே.கம்பன், நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத் துறை இராமகிருஷ்ணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், மீனாம்பிகை. வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அரக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.