அனுமந்தபுரம் வனப்பகுதியில், துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் அருகில் ஒரு பெண்ணை துப்பாக்கி தோட்டா உரசிச் சென்ற திடுக் சம்பவம் நடந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், அனுமந்தபுரம் வனப்பகுதியில், துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் உள்ளது.
ராணுவம், துணை ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ், ரயில்வே பாதுகாப்பு படையினர் உட்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கு வீரர்களுக்கு, துப்பாக்கி உட்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சி மையத்தில் இருந்து 3 கி.மீ. துாரத்தில் உள்ள சென்னேரி கிராமத்தை சேர்ந்த மோகன் மனைவி ஜெயலட்சுமி, தனது வீட்டில் வரவேற்பு அறையில் நின்றுக் கொண்டிருந்தார். அவரின் உடலையொட்டி துப்பாக்கி தோட்டா பாய்ந்து சென்று, சுவரில் மோதி கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், செங்கல்பட்டு தாசில்தார், வருவாய்துறை அதிகாரிகள், வெடி குண்டு நிபுணர்கள், சென்னேரி கிராமத்தை ஆய்வு செய்து கிராம மக்களிடம் விசாரித்தனர்.
அந்த பகுதி நிலத்தில் விவசாய பணியில் பெண்கள் ஈடுபட்டிருந்த போது, 6 தோட்டாக்கள் வந்து விழுந்ததும் தெரிய வந்தது. அடிக்கடி இது போன்ற துப்பாக்கி தோட்டாக்கள் கிராமத்தில் வந்து விழுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
பெரும்பாக்கம் அருகே இருந்த துப்பாக்கி சூடும் பயற்சி மையத்தில் இருந்து இதே போன்று தோட்டாக்கள், அடிக்கடி குடியிருப்பு பகுதியில் வந்து விழுந்ததால், அந்த பயற்சி மையம் இடமாற்றம் செய்யப்பட்டது. அதே போன்று, இந்த பயற்சி மையத்தையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர்.