மீண்டும் மீண்டும் தனது சர்ச்சைக் கருத்துகளை சரந்தொடுத்து, தான் வகிக்கும் பொறுப்பை மீறி, முழுக்க முழுக்க ஓர் அரசியல் கட்சியின் பரப்புரையாளர் போலவே செயல்பட்டு வருகிறார் தமிழ்நாடு அரசின் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று பெரும்பாலான தமிழ் மக்களின் பெருங்குரல் ஆதங்கத்தோடு ஒலிக்கின்றது.
ஒட்டுமொத்த மனித குலமே போற்றிக் கொண்டாடும் திருவள்ளுவர் தினத்தன்று, ஆளுநர் ஆர்.என்.ரவி, அய்யன் திருவள்ளுவருக்கு காவியுடை உடுத்தி, நெற்றியில் பட்டைத்தீட்டி காவிப்பிரசார ஒப்பனையோடு, தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் இப்பிரசாரப் போக்கு, ஒட்டு மொத்த உலகத் தமிழர்களின் உள்ளங்களை யெல்லாம் கொதிப்படையச் செய்துள்ளது. தனது சனாதனக் கொள்கை நிலைப்பாட்டை, அதன் ஆதரவுத் தீவிரப் போக்கை திருவள்ளுவர் மீது திணித்துத் திளைக்கும் ஆளுநரின் செயலுக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆளுநரின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்க எத்தனிக்கும் ஒட்டு மொத்த தமிழினத்தின் குரலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில், ”தமிழினத்தில் பிறந்து, அமிழ் தமிழில் அறம் உரைத்து, உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும் தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.
குறள் நெறி நம் வழி!
குறள் வழியே நம் நெறி!” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து தமிழர்களின் உணர்வை உரசிப் பார்க்கும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பகிர்ந்து வருவது என்பது ஆரோக்கியமானதல்ல. உலக சரித்திரத்தில் இதுவரை அதிகாரப் பின்னணியோடு செலுத்திய அராஜகப் போக்குகளும் வரம்பு மீறிய வெறுப்பரசியலும் வென்றதாகவோ நின்று நிலைத்ததாகவோ எந்தத் தடயமும் இல்லை.
சிம்மாசனம் என்பதும் கிரீடம் என்பதும் நிலையானவை அல்ல. காலச்சக்கரத்தின் சுழற்சியில் கழண்டு போகக்கூடியவை. மாற்றத்துக்குரியவை. இதனை நினைவில் நிறுத்தாமல், அதிகாரம் கையில் உள்ளது என்பதால், நெறிபிறழ்ந்து நடந்துகொள்வது நலம் பயக்காது.
தான் வகிக்கும் ஆளுநர் பதவி தனிப்பட்டவர்களின் அடையாளங்களை கட்டமைக்கவோ வரலாற்றை மாற்றிச்சொல்லும் விவசகாரங்களுக்கு பயன்படுத்தவோ கூடிய பதவி அல்ல என்பதையும் அந்த பதவியில் இருக்கும் வரை தான் ஒருபொது மனிதன் என்பதை ஆளுநர் உணராமல் இருப்வபது இந்திய அரசியலமைப்புக்கே எதிரான செயல் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.