திண்டுக்கல்லில் நடைபெற்ற சேவல் காண்காட்சியில் ரூ. 5 லட்சம் வரை சேவல் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. திண்டுக்கல் பைபாஸ் சாலையில், பாரம்பரிய சேவல் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் தனி அமைப்பு ஒன்று, சேவல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
கண்காட்சியில் பங்கேற்பதற்காக ஆத்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சேவல் வளர்ப்போர் தங்களது சேவல்களை கொண்டு வந்திருந்தனர். கிளி மூக்கு, விசிறிவால் இன சேவல்கள் இந்த போட்டியில் பங்கேற்றது.
போட்டியின் அமைப்பாளர்கள் அதன் உயரம், வாலின் நீளம், நிறம், மூக்கின் தன்மை உள்ளிட்டவைகளை ஆராய்ந்து சிறந்த சேவல்களை தேர்ந்து எடுத்தனர்.
450 சேவல்கள் பங்கேற்ற இந்த கண்காட்சியில், சிறந்த சேவல்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கொண்டு வரப்பட்ட சேவல்களுக்கு போட்டியாளர்கள், ரூ.5 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்திருந்தனர் என்றாலும் சேவல் வளர்ப்போர் பலரும் தங்களது சேவல்களை விற்பனை செய்யவில்லை.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நெல்சன் கூறும்போது, “பாரம்பரிய சேவல் ரகத்தை காப்பதற்காக இந்த சேவல் கண்காட்சியை ஆண்டு தோறும் நடத்தி வருகிறோம். சேவல் வளர்ப்போர் அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். தங்களது சேவல்களை அவர்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் குழந்தைகளை விட நன்கு கவனித்து பராமரித்து வருகின்றனர். சிறந்த சேவல்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.