தூத்துக்குடியில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது
அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார் திருநகரி ஆகிய பகுதிகளில் 7 வது நாளாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு நிவாரண உதவிகள், சாலைகள் மற்றும் பாலங்கள் சீரமைக்கும் பணிகளை ஒவ்வொரும் நாளும் முழுவீச்சில் துறை அதிகாரிகளுடன் களத்தில் நின்று செயலாற்றிக் கொண்டு வருகிறார் அமைச்சர் எ.வ.வேலு,
சிறப்பு மருத்துவ முகாம்!
கனமழையினால் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனைச் சுற்றிள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் 186 இடங்களில் நடத்திட 51 மருத்தவ குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேற்று அமைச்சர் எ.வ.வேலு முதல் சிறப்பு மருத்துவ முகாமை ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீகுமரகுரு பரசுவாமிகள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது.
சிறப்பு மருத்துவ முகாம் மூலம் மதியம் 12 மணி வரை 7,175 நபர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டுள்ளது கருங்குளம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 87 ஊராட்சிகளில் இருக்கின்ற பாதிப்புகளை, ஊராட்சி பணியாளர்களை கொண்டு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
லாரிகள் மூலம் குடிநீர்!
ஏரல் பகுதியில் குரும்பல் என்ற இடத்தில் உள்ள பாலத்திற்கு பதிலாக தற்காலிக சாலை 2 நாட்களில் முழுவீச்சீல் அமைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் 112 இடங்களில் கிணறுகள் அமைக்கப்பட்டு குடி தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மழை வெள்ளத்தால் மின் மோட்டார் பம்புகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தற்போது ஊராட்சிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக லாரிகள் மூலம் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
மின்சார இணைப்புகள்!
மின்சார பணிகளில் வீட்டு மின்சார இணைப்புகள், வியாபாரத்திற்கு வழங்கப்படும் மின்சார இணைப்புகள், விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சார இணைப்புகள் உள்ளது. இதில் வீட்டு மின்சார இணைப்பும், வியாபாரத்திற்கு வழங்கப்படும் மின்சார இணைப்புகளும் நிறைவடைந்துவிட்டது. மீதமுள்ள 5% பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிவடைந்துவிடும்.
24.12.20231 அன்று மாலைக்குள் நிறைவடைந்து பேருந்து போக்குவரத்து தொடங்கிவிடும். கிராம பகுதிகளுக்கு கிராமச் சாலைகள் மூலம் 4 தரைப் பாலங்களை, உயர்மட்ட பாலங்களாக கோபாலபுரம், ஏரல், பொட்டல்ஊரணி, உமரிக் கோட்டம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டது. உயர்மட்டப் பாலம் கட்டும் பொழுது மாற்று சாலைகள் அமைக்கப்படுவது வழக்கம். அந்த மாற்று சாலைகளும் மழைநீர் வெள்ளத்தால் அடித்துக் செல்லப்பட்டது. அந்த 4 சாலைகளில் 3 சாலைகள் செப்பனிடப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள 1 சாலையை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. முடித்தவுடன் போக்குவரத்து தொடங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தின் 113 சாலைகளில் 104 சாலைகள் சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவு அடைத்து விட்டன. மீதமுள்ள பணிகள் 24.12.2023 மாலைக்குள் நிறைவேற்றும். இன்று முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து இயல்பு நிலைக்கும் திரும்பும்.
போக்குவரத்து தொடங்கிவிடும்!.
மேலும், பாளையங்கோட்டை – திருச்செந்தூர் செல்லும் வழித்தடத்தில் உள்ள இடங்களில் சாலைகள் பழுதடைந்து சாலைகள் துண்டிக்கப்பட்டடு இருந்தது. தொடர்ந்து இரவு, பகல் பாராமல் தற்காலிக சீரமைப்புப் பணிகள் மேற் கொண்டதின் அடிப்படையில் போக்குவரத்து தொடங்கப்படும். பேரிடர் காலங்களில் சாலைகள் மிகவும் பழுதடைந்துவிடுகிறது. அதனை சரி செய்வது மற்றும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் ஆணையின்படி பணிகளை மேற்கொண்டு சாலைகள் அமைக்கப்படும்.
தொடர்ந்து 7வது நாளாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் இணைந்து பணியாற்றிக் கொண்டுள்ளனர். பேரிடர் மீட்பு தலைமைப் பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள், ஆய்வாளர்கள் இணைந்து சாலைகள் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு எ.வ.வேலு தெரிவித்தார்.